மதுரை குலுங்க குலுங்க..
2681
18
|   May 09, 2017
மதுரை குலுங்க குலுங்க..

"தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் "

"புழுதி பறக்க பறக்க நீ போடாத ஆட்டம் போடு "

இது திரைப்பட பாடலின் வரிகள் மட்டும் அல்ல. பல ஊர் திருவிழாக்களின் உண்மை நிலவரமும் கூட..

மதுரை.. நான் பிறந்து வளர்ந்த மண்.. அந்த ஊரின் மிக முக்கியமான சிறப்பு சித்திரை திருவிழா.. ஊரே திரண்டு வந்து கொண்டாடும் விழா.. பிழைப்பு தேடி பல இடம் சென்றாலும் சித்திரை மாதம் ஊரைத் தேடி வரச் செய்யும் வைபவம்..

இன்றைய பள்ளிகளின் நிலை போல் அல்லாமல் சரியாக மார்ச் 31 ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து 2 மாதம் விடுமுறை தொடங்கி விடும். 2 மாதம் விடுமுறையிலும் நாங்கள் மிகவும் எதிர்பார்ப்பது திருவிழா மட்டுமே.

அலங்கரித்த கோவில் யானை, ஒட்டகம், மாடுகள், மேள தாளம், குழந்தைகளின் ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம்,  சுவாமி தரிசனம், ஜவ்வு மிட்டாய்.. சொக்கநாதர், மீனாட்சி, கண்ணன், ராதை, மாரியம்மன், முருகன், விநாயகர் இன்னும் பல தெய்வங்களாக உலா வரும் குழந்தைகள்.. ஆஹா.. காணக் கண் கோடி வேண்டும்..

உற்றார் உறவினர் அனைவரும் திருவிழா சாக்கில் வீடு வந்து சேரும் நேரம். உறவினர் நண்பர்களோடு சேர்ந்து இவை அனைத்தையும் அனுபவிக்கும் சுகமே தனி.. அந்த சுகமான நினைவுகளே இன்னும் பலரை திருவிழா நேரம் ஊரை நோக்கி இழுத்து வருகிறது.. வேலை பளுவும் பயண சுமையும் பல இடையூறுகள் செய்தாலும் ஊர் திருவிழா காண இன்னும் மனது துடிக்கத் தான் செய்கிறது.

மேலே கூறிய பாடலின் வரிகள் போல் ஆண், பெண், வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் ஆட்டம் போட செய்வது தனி சிறப்பு. ஆட்டம் பாட்டம் மட்டும் அல்ல திருவிழாவின் வரலாறும் தலைமுறைகள் தாண்டி எடுத்து சொல்லப்படுகிறது. மீனாட்சி திருக்கல்யாணம், தேர் திருவிழா, அழகர் எதிர்சேவை, ஆற்றில் இறங்கும் அழகர்.. திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்.. வழி நெடுகக் கிடைக்கும் புளியோதரையும் நீர் மோரும் மக்களின் பசி தாகத்தை பார்த்துக் கொள்ளும்..

இந்த வருட திருவிழா தான் என் 2 வயது மகன் விவரம் அறிந்து பார்த்து ரசித்த முதல் திருவிழா. என்ன ஒரு ஆட்டம் !!!  என்ன ஒரு சந்தோஷம் அந்த குழந்தையின் முகத்தில் !!! அதற்காகவே வருடம் முழுவதும் திருவிழா நடக்கலாம் போல.. ;-) அப்படி ஒரு இன்பம் நம் திருவிழாக்களில்.. ஒரு மிகப் பெரிய நிம்மதி.. என் குழந்தை வாழ்வின் இந்த முக்கியமான தருணங்களைத் தவற விடவில்லை என.. இன்னும் ஒரு பெரிய இன்பம்.. என் பிள்ளைக்கும் ஒரு இனிமையான குழந்தைப் பருவம் கிட்டும் வாய்ப்பு ..

இன்றைய குழந்தைகளின் வாழ்வில் படிப்பும் விடுமுறை வகுப்புகளுமே நிறைந்திருக்கின்றன. இப்போது இருக்கும் இயந்திர வாழ்வின் இடையில் சிறு சிறு கொண்டாட்டங்கள் இன்றியமையாதவை. திருவிழாக்கள் இளைய தலைமுறையினர்க்கு ஒற்றுமை விருந்தோம்பல் போன்ற நாம் மறந்து போன நல்ல பண்புகளை கற்றுத் தருவன.

வாழ்வில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கிப் பெருக திருவிழா காண வாரீர் !!!

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day