​​தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே..
118986
1
|   Apr 25, 2017
​​தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே..

நல்ல உறக்கம் ஓர்  இனிய நாளின் துவக்கம். 

தூக்கம் - ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கியமான இடத்தை பிடித்தது. குழந்தை வளர்ச்சிப் பாதையில் இன்னும் ஓர் அடி உயர்ந்த இடம் பெற்றது.அவர்களைப் பெற்ற அன்னையர்க்கும் இரவு நேர உறக்கம் முக்கியமே..

குழந்தை தூங்கும் போது நீயும் தூங்கலாமே - இது பல அன்னையர் கேட்டு சலித்துப் போன வாசகம். இதை சொல்பவருக்கும் தெரியும் அது நடக்காது என்று.. அதனால் குழந்தையின் இரவு உறக்கம் தாயின் உறக்கத்திருக்கும் முக்கியமானது.

குழந்தையின் தூக்கம் எவ்வளவு முக்கியமோ அப்படியே அவர்களை தூங்க வைக்கும் முறையும். தூங்க செல்லும் போது நல்ல மனநிலையுடன் இருந்தால் மறுநாளும் சிறப்பானதாக அமையும்.

வலுக்கட்டாயமாக உறக்கத்திற்கு செல்லும் குழந்தை நிம்மதியான தூக்கத்தை அனுபவிப்பது கடினம். இது இரவு உறக்கத்தை கெடுப்பதோடு அல்லாமல் உங்கள் காலை நேரத்தையும் கசப்பானதாக மாற்றிவிடும்.

இருவரின் நிம்மதியான உறக்கத்திற்கு இதோ சில குறிப்புகள்..

1. இசையோடு நாம்

     -     ஏதேனும் ஒரு மெல்லிசை கேட்டு உறங்க செல்லும் குழந்தை ஆழ்ந்து நிம்மதியாக உறங்கும். அந்த இசை தாயின் தாலாட்டாக இருக்கலாம், பக்தி பாடலாக இருக்கலாம், வாத்திய இசையாக (Instrumental) இருக்கலாம். இசை மனதிற்கு இதம் தரும். அமைதியான தூக்கம் தானாகவே வந்து சேரும்.

2. இரவு உணவு

     -     குழந்தை பசியுடன் தூங்கினால் இரவில் அடிக்கடி எழும் வாய்ப்பும் அதிகம். அதற்காக குழந்தைக்கு உணவை திணிக்கவும் கூடாது .சரியான இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி. குழந்தையும் வயிற்றை சிரமப்படுத்தாத உணவாக இருப்பது மிக முக்கியம். செரிமானம் ஆகாத உணவுகள் குழந்தையின் வயிற்றை கெடுப்பதோடு தூக்கத்தையும் கெடுக்கும்.

3. கதை கேளாயோ

     -     குழந்தைக்கு பிடித்த முறையில் ஏதேனும் கதை சொல்லி தூங்க வைக்கலாம். குழந்தைக்கு பிடித்த விஷயங்களை கதை வடிவில் கூறலாம். இது நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்க சிறந்த வழியும் கூட. கதை வழியே தூங்க வைக்க முயற்சி செய்கிறேன் என்று பயமுறுத்தும் கதைகள் சொல்ல கூடாது. இவை பயத்தை அதிகரிப்பதோடு குழந்தையையும் இரவில் கண் விழிக்க வைக்கலாம்.

4. சூழல்

     -     தூங்க வைக்கும் இடமும் குழந்தையின் கவனத்தை சிதறடிக்காத வகையில் இருந்தால் இன்னும் சிறப்பு. உறக்கத்திலும் குழந்தை பாதுகாப்பை உணரும் வகையில் இருக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு தொட்டில் ஸ்பரிசம், சில குழந்தைகளுக்கு தாயின் ஸ்பரிசம். உங்கள் குழந்தை எதை பாதுகாப்பாக உணர்கிறதோ அதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தவும். 

எல்லா குழந்தைக்கும் ஒரே முறை பயன்படாது. ஒரே குழந்தைக்கு கூட எப்போதும் ஒரே முறை பயன் தராது. குழந்தையின் அன்றைய மனநிலைக்கு ஏற்ப தூங்க வைக்கும் யுக்திகளைக் கையாள வேண்டும். நன்றாக உறங்கி எழும் உங்களை வரவேற்க இனிய காலைப் பொழுது காத்திருக்கும்.

இங்கு சொல்லப்பட்ட அனைத்தும் என் சொந்த அனுபவத்தின் வெளிப்பாடு. 

முயன்று பாருங்களேன் ..  

இனிய உறக்கம் ஆரோக்கியமான வாழ்வு :-)

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day