எது குறை ?
730
|   Jun 04, 2017
எது குறை ?

"மீனா ! உனக்கு பூமிகாவை ஞாபகத்தில் இருக்கா? இந்தப் பட்டு பாவாடை பாரேன்... இதுக்கு நாம ரெண்டு பேரும் எப்படி சண்டை போடுவோம்? அப்போ, பூமிகா வந்து சமாதானப் படுத்துவா ! " மேனகா சொல்வதை காதில் போட்டுக்கொண்டதாய் தெரியவில்லை மீனா ... அவள் கையில் இருந்த புத்தகத்தில் இருந்த படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்....அது நடிகர் சூரியாவின் படம்... ஓரக்கண்ணால் பார்த்துவிட்டாள் மேனகா.. 

"ஏய்... மீனா! என்ன செய்யறே? நான் பேசறது கேட்கலே ? " இது மேனகா... "சும்மா இரு... அப்புறம் வா.. " முடித்தாள் மீனா.. " வந்து கவனிச்சுக்கறேன்! " சொல்லிவிட்டு கோபமாய் சென்றுவிட்டாள் மேனகா.. 

மீனா, மேனகா சகோதரிகள்.... இருவருக்கும் 2 வயதுதான் வித்யாசம்... மீனா அழகுதான்.. ஆனால் அவளின் வலது கை கொஞ்சம் வளைந்து சூம்பி இருந்தது.. பிறவியிலேயே... அந்தக் கையால் வேலை எல்லாம் செய்ய முடியாது.. தன்   வேலையை பார்த்துக்கொள்வாள் அவ்வளவுதான்.. அம்மாவிற்கு மிகவும் வருத்தம்.... எத்தனையோ பூஜைகள் செய்து அடுத்து பிறக்கும் குழந்தை குறை இல்லாமல் பிறக்க வேண்டும் என பிரயர்தனப்பட்டு மேனகா பிறந்தாள்... குறை ஏதும் இல்லாமல்.. 

குழந்தைகள் வளர ஆரம்பித்தன.... மீனா மிகவும் பொறுமைசாலியாக, பாசமிகுந்தவளாக.... ஆனால், மேனகாவோ, கோபக்காரியாக, பொறாமை மிகுந்தவளாக, கர்வமுடனும் வளர்ந்தாள்.... வருஷங்கள் நகர்ந்தன..... அம்மா மீது பாசத்தை பொழிந்தாள் மீனா.... மேனகாவோ, அவளுக்கு பாசம் என்றால் என்னவென்றே தெரியாது.... தனக்கு வேண்டியது கிடைத்தாக வேண்டும்... அதற்காக என்னவேண்டுமானாலும். செய்வாள்.. அம்மாவிற்கு மேனகாமீது கொஞ்சம் கோபமும் , வருத்தமும் இருந்தது.... 

ஒரு முறை அம்மாவிற்கு கடுமையான ஜுரம் அடித்து 10 நாட்கள் எழுந்திருக்க முடியாத சூழ்நிலை.... மீனாதான் கூடவே இருந்து கவனித்தாள்...தன்  கை குறை எல்லாம் அவள் என்றுமே சட்டை செய்ததில்லை.... மேனகா அவள் சித்தி வீட்டிற்கு சென்றுவிட்டாள்... 

இதோ ! கல்யாண வயதில் இருவரும்.... " ரெண்டு பேருக்குமே கல்யாண வயசு வந்தாச்சு... மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க வேண்டாமா? " இது அம்மா " பார்க்கலாம் ! மீனாவிற்கு முடிக்காமல் எப்படி மேனகாவிற்கு பார்ப்பது என்று யோசிக்கிறேன்... " அப்பா கொஞ்சம் வருத்தத்தோடு..

 " ஏன்? மீனாக்கு முதல்ல பாருங்கோ...." அம்மா சொன்னாள்.. " என்ன பேசறே? அவளுக்கு கைலே ஊனம் இருக்கறது உனக்கு ஞாபகம் இல்லையோ? " அதனாலே? அப்படியே விட்டுட முடியுமா என்ன? அவளுக்கு ஏத்தமாதிரி ஒரு மாப்பிள்ளை வரப்போறார்... இனிமேலா பிறப்பார்? " அம்மா சொன்னதும் அப்பாவிற்கு கொஞ்சம் கோபம் வந்தது... 

" புரிஞ்சுண்டு பேசு ! நல்லா இருக்கிற பெண்களுக்கே மாப்பிள்ளை கிடைக்கறது கஷ்டமா இருக்கு... நீ என்ன பேசறே? "அவளுக்கு என்ன குறைச்சல்? மூக்கும் முழியுமா நல்லா இருக்கா? "அம்மாவின் பாசத்தில் கூறினாள்... .அப்பா சமாதானம் ஆகவில்லை... 

இரண்டு மாதங்கள் நகர்ந்தன.... நிறைய வரன்கள் வந்தன... அப்பா மேனகாவிற்குதான் பார்த்தார்... அம்மாவிற்கு மிகவும் வருத்தம்... ஒன்றும் சொல்ல முடியவில்லை ... மனதிற்குள் போட்டு புழுங்கினாள்.... "பகவானே....! நீதான் என் குழந்தைக்கு நல்லா வாழ்க்கை கொடுக்கணும்..." என்று வேண்டிக்கொண்டாள்.... 

இரண்டு நாட்களில்  பெண் பார்க்க வருவதாய் தொலைபேசியில் தரகர் கூறி இருந்தார்... விவரம் ஏதும் சொல்லவில்லை.... மாப்பிள்ளை வீட்டு மனிதர்கள் வந்தனர்... காபி சாப்பிட்ட பிறகு பெண் பார்க்கும் நேரம்... பெண் வந்து உட்கார்ந்தாள்.. அவள் அழகில் ஒரு மென்மையான இதயத்தை உணர்ந்தான் மாப்பிள்ளை பரத்... பெண்ணிடம் தனியாக பேச விரும்பினான்... அப்பா சற்று யோசித்தார்... அவருக்கு குழப்பம் தான்...வெளி காட்டிக்கொள்ள வில்லை... சரி ! என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தார்...

பொதுவாக பெண் பார்க்கும் நேரத்தில் மீனா மொட்டை மாடிக்கு சென்றுவிடுவாள்... ஆனால் இன்று? அவள் கல்யாணப் பெண்னாய் ! 

தனியாக சென்றனர் பேச.... சற்று தயக்கத்தோடு இருந்தாள் மீனா.. அவளுக்கு வியர்த்தது... " என்ன ஆச்சு? உடம்பு சரி இல்லையா? " பரத் கேட்டான்.. " ஒன்னும் இல்லை ! " என்றாள் மீனா.... மெல்லிய குரலில் " என் கையை பார்த்தீர்களா? பிறவியிலேயே இந்தக் குறை... என் வேலைகளை நான் செய்துப்பேன் .. ஆனால், பெரியதாய் வேறொன்றும் செய்ய முடியாது... மிகவும் கஷ்டம்... உங்களுக்கு இது தெரியுமா? " முடித்தாள் மீனா.. 

" தெரியும்... தரகர் சொன்னார்.. இது ஒன்னும் பெரிய குறையாக எனக்கு தெரியலே... உன் அழகிலே ஒரு தெய்வாம்சம் இருக்கு.. ஒரு மென்மை இருக்கு. அதை உன்னை பார்த்த நொடியிலேயே தெரிஞ்சுண்டேன்... எனக்கு உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதம்.. உன் விருப்பத்தை சொல்லு... " சுருக்கமாய் பரத் கேட்டது ஆச்சரியமாக இருந்தது மீனாவிற்கு.... " உங்க அப்பா , அம்மாக்கு ? " என்று இழுத்தாள் மீனா... " அவர்களுக்கும் தெரியும்... என் விருப்பம் தான் அவாளுக்கு... சரி .. அவசரம் இல்லை... யோசிச்சு சொல்லு " என்று கூறி விட்டு சென்றான்.... 

அப்பா, அம்மாவிடம் பேசினான் பரத்... 

மீனா உள்ளே சென்று அம்மாவிடம் ஏதோ சொன்னாள்..... அப்பாவும் அங்கு வந்தார்... அவர் கண்ணில் கோபத்தை உணர முடிந்தது அம்மாவிற்கு... 

மேனகா அப்பாவிடம் " அப்பா! என்னை மன்னித்துடு...நான்தான் அம்மாகிட்ட சொல்லி இதை ஏற்பாடு செய்ய சொன்னேன்... மீனாக்கு என்னபா குறைச்சல்? அவள் கைல இருக்கிற குறை அவளோட தப்பா? மாப்பிள்ளைக்கு பிடித்தால் பார்க்கலாம்னு நான்தான் சொன்னேன்... சாரி... உன் கிட்ட சொன்னால் கட்டாயம் ஒத்துக்க மாட்டேன்னு தெரியும்.. அதனாலே தான் சொல்லலே..." வெளிப்படையாய் பேசினாள் மேனகா... 

அம்மா அப்படியே சிலையானாள்... "இந்தக் குழந்தையை தப்பாக நினைத்தோமே... இவளுக்கு பாசம் இல்லை, கோபக்காரி என்றெல்லாம்.... ஆனால் இவளோ தன்  விசால மனசை காட்டிட்டா..." மனசில் சந்தோஷப்பட்டாள்...

அப்பா ஒரு வழியாக சமாதானமானார்... அப்பா தான் செய்யவேண்டிய கடமையை இந்தச் சின்ன பெண் செய்ததை நினைத்து வெட்கப்பட்டார்.... மேனகா கையை பிடித்து உலுக்கினார்... 

மாப்பிள்ளை வீட்டில் எல்லோர் முகத்திலேயும் சந்தோஷத்தை காண முடிந்தது.... மேனகாவின் கிசுகிசுப்பில் மீனா வெட்கத்த்தில் அழுதே விட்டாள். 

மற்றுமொரு குடும்பத்தோடு...சந்திக்க வருவேன்.. 

மைதிலி ராம்ஜி

Read More

This article was posted in the below categories. Follow them to read similar posts.
LEAVE A COMMENT
Enter Your Email Address to Receive our Most Popular Blog of the Day